சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுகிறது. நேற்று மாலை வரை 99,794 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துக்குத் தடை நீடிப்பதால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று(ஜூலை31) ஒரே நாளில் 5881 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 31 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 45,859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5,778 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 83,956 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 97 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்தது.
சென்னையில் தினமும் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1013 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 99,794 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 334 பேருக்கும், காஞ்சிபுரம் 485, மதுரை 173, திருவள்ளூர் 373 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 14,534 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,009 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 13,836 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. பல மாவட்டங்களில் நேற்று 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று குறைவாகக் காணப்பட்டு வருகிறது.
இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 45 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.