தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தைத் தாண்டுகிறது.
தமிழகத்தில் நேற்று(செப்.12) 5495 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 97,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தினமும் புதிதாக தொற்று கண்டறியப்படுபவர் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதால், இன்று(செப்.13) மாலை தமிழக அரசு வெளியிடக் கூடிய மருத்துவ அறிக்கையில், அனேகமாக பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டி விடும்.
மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6227 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 41,649 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 76 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8307 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 47,110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 978 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 47,591 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 267 பேருக்கும், கோவையில் 428பேருக்கும், சேலத்தில் 289 பேருக்கும், கடலூரில் 263 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 299 பேருக்கும், தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டில் இது வரை 30,065 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,025 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 86,486 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 57 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.