சிக்கலில் சிவகாசி : ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கம்

by Balaji, Nov 15, 2020, 10:42 AM IST

வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கி உள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை காரணம் காட்டி டெல்லி துவங்கி வட மாநிலங்கள் பலவற்றிலும் படிப்படியாக பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ராஜஸ்தான், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங் களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக பட்டாசு நகரான சிவகாசியில் தற்போது 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன.

நூற்றாண்டை நெருங்கி வரும் சிவகாசி பட்டாசு தொழில் அதன் சார்பு தொழில்கள் மூலம் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது. இந்தியாவின் பட்டாசு தேவையில் 90 சதவீதம் வரை சிவகாசி ஆசைகளை பூர்த்தி செய்து வருகின்றன. இங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் அலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி முடிந்த பின் 15 தினங்களுக்குள் மீண்டும் திறக்கப்பட்டு பட்டாசு உற்பத்தி துவங்கும். ஆனால் இந்த ஆண்டு மீண்டும் பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க முடியுமா என்ற அச்சத்தில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

நடப்பாண்டில் ஏற்கனவே கொரானா காலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக பட்டாசுகள் தயாரிப்பு தடைபட்டது. அதன் பின் வடமாநிலங்களில் காற்று மாசை காரணம்காட்டி பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதனால் கொள்முதல் செய்த பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாமல் வடமாநில பட்டாசு வியாபாரிகள் தங்களது கடைகளை பூட்டி விட்டனர். வடமாநில பட்டாசு வியாபாரிகளிடம் விற்பனையாகாத பட்டாசுகள் முழுமையாக இருப்பில் உள்ளதால் அடுத்த ஆண்டு பட்டாசு ஆர்டர்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

95 ஆண்டு கால பட்டாசு உற்பத்தியில் இப்படி ஒரு சிக்கல் வந்ததில்லை. அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பட்டாசு தொழிலுக்கு பல சிக்கல்கள் உருவெடுத்துத்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். எனவே பட்டாசு தொழிலுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நிரந்தரமான ஒரு தீர்வு காண மத்திய அரசு முழு கவனம் செலுத்தி பட்டாசு தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே பட்டாசு தயாரிப்பாளர் களின் வேண்டுகோளாக உள்ளது.

You'r reading சிக்கலில் சிவகாசி : ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை