புரெவி புயல் இன்றிரவு குமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும்.. 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்..

by எஸ். எம். கணபதி, Dec 3, 2020, 09:31 AM IST

வங்கக் கடலில் தற்போது இலங்கைப் பகுதியில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. கடந்த 1ம் தேதி இரவு இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இன்று(டிச.3) காலையில் இந்த நிரவி புயல், தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலையில் மன்னார் வளைகுடா கிழக்கே 40 கி.மீ. தொலைவில் இலங்கைப் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது.

பாம்பனில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்குக் கிழக்கு மற்றும் வடகிழக்கே 320 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.இது மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும். இன்று பிற்பகலில் பாம்பனை நெருங்கி வரவிருக்கிறது. அதன்பின்னர், தென்தமிழக கடலோர பகுதிகளைக் கடந்து இன்றிரவு அல்லது 4ம் தேதி அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் தாக்கம் தென் கடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3 மணி முதல் தெரியும். இதன் காரணமாக சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்