மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல் கடந்தாண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மக்களவை பொதுத் தேர்தலையும் சந்தித்தார். மாநிலம் முழுவதும் கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து, மக்களவை மற்றும் 17 சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர், உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் ஆவர். மேலும் பிரச்சார யுக்தியையும் ஹைடெக் பாணியில் கையாண்ட கமலின் கட்சிக்கு கொங்கு மண்டலத்திலும், நகர்ப்புற வாக்காளர்களிடமும் ஓரளவுக்கு ஆதரவு கிடைத்தது. இதனால் கணிசமான வாக்குகளை பெற்றதன் மூலம், அடுத்து 2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்கூட்டியே ஆயத்தமாகத் தொடங்கி விட்டார்.
அதன்படி, சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டிச.13 முதல் 16ஆம் தேதி வரை கமல்ஹாசன் பரப்புரை செய்யவிருக்கிறார். ' சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் முதற்கட்ட பரப்புரையை தொடங்குகிறார் கமல் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றோர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் கமலும் களத்தில் குதித்திருப்பது தமிழக அரசியலை மீண்டும் சுறுசுறுப்பாக்கியுள்ளது.