தென்தமிழக பகுதிகளில் கடல் சீற்றம் நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், குளச்சல் முதல் கோடியக்கரை வரை உள்ள கடல் பகுதி மற்றும் அந்தமான் கடற் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும் என்றும், அலைகள் 3 மீட்டர் அளவுக்கு உயரும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.