உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஓராண்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிமம் பெறப்பட்டுள்ளதா என பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதேபோல, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது என்ற விவரங்களையும் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறவில்லை என்றால் ஏழு நாட்களில் மூடப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து, மது அருந்துபவர்களின் உடல் பாதுகாப்பு முக்கியம் என்பதால் டாஸ்மாக் பார்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு தரமான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுக் கடைகளை இரண்டு மணிக்கு மேல் ஏன் திறக்கக் கூடாது என்ற கேள்வியை முன்வைத்து இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.