இயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற பயம் இல்லையா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சினிமா படத்தொடக்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது பாரதிராஜா, ‘விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும் ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்படுத்துவோரின் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம்' என்றும் ஆவேசமாக பேசினார்.
இது தொடர்பாக இந்து முன்னணி கொடுத்த புகாரின் பேரில் வடபழனி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் நிபந்தனை அடிப்படையில் பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதன்பின்னர் 3 வாரங்களுக்குள் போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த நிபந்தனையை பாரதிராஜா நிறைவேற்றவில்லை. இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று பாரதிராஜா தரப்பில் புதிதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாரதிராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு அவகாசம் கோரிதான் மனுத்தாக்கல் செய்துள்ளோம், வேண்டுமானால் அபராதத்துடன் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, அரசு தரப்பில், பாரதிராஜா தாக்கல் செய்துள்ள மனுவை முதல்முறை தாக்கல் செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், நீதிபதி, அரசின் குற்றச்சாட்டுக்கு பாரதிராஜா பதில் என்ன என கேள்வி எழுப்பியதுடன், அபராதம் செலுத்திவிட்டால் செய்த தவறு சரியாகிவிடுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும், கைது செய்யப்படுவோம் என்ற பயம் இல்லையா என பாரதிராஜா தரப்பையும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல்துறையினரையும் நீதிபதி குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக பாரதிராஜா தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததுடன், முழு விவரங்களுடன் புதிய மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.