செயின் பறிப்பு திருடனை துரத்தி பிடிப்பவர்களுக்கு 50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் அறிவித்துள்ளார்.
சூலூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த விபத்தில் வகுப்பறையில் இருந்த மாணவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட உடமைகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான பள்ளியில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியை சீரமைக்க 50 ஆயிரம் ரூபாய் சொந்த பணத்தில் இருந்து தருவதாக அவர் உறுதி அளித்தார். பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அளித்த புகார் மனுவை எம்.எல்.ஏ கனகராஜ் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், "பள்ளிக்கு தீ வைத்த நபர்களை கண்டுபிடித்து கொடுக்கும் நபருக்கு 5 ஆயிரமும், செயின் பறிப்பு திருடர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், பரிசுத்தொகை வழங்கப்படும்" என்றார்.
மேலும், "திருடனை கண்டுபிடித்து, நகை, பணத்தை பறிமுதல் செய்யும் காவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படும்” என்றும் எம்.எல்.ஏ கனராஜ் அறிவித்துள்ளார்.