அரசியல் சாணக்கியர் என்று தமிழக அரசியலிலும் இந்திய அரசியல் களத்திலும் போற்றப்படும் ஆளுமையாக விளங்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் மருத்துவர்ளின் உதவியுடன் கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவில் உடல்நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி கொண்டு செல்லப்பட்டார்.
கருணாநிதிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரின் தொண்டர்கள் கலக்கமுற்றனர். காவேரி மருத்துவமனை வளாகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். அப்போது தொண்டர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.
அப்போது, திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாகவும், தொண்டர்கள் அமைதிகாத்து கலைந்து செல்லுமாறும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தொண்டர்கள், ‘வாழ்க வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் வாழ்கவே!’ என்று தொடர்ந்து முழங்கினர்.
மருத்துவமனை சார்பிலும், கருணாநிதி இயல்பு நிலைக்கு திரும்புகிறார் என்று மருத்துவ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயினும், தொண்டர்கள் கலைந்துசெல்லவில்லை, மாறாக மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக்கிடந்தனர். அதனை தொடர்ந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். எனினும் விடிய, விடிய பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொண்டர்கள் அவர் நலம் பெறவேண்டும் என்று உணவு தூக்கம் இன்றி காத்துக் கிடக்கின்றனர். அதேபோல, “வாழ்க... வாழ்க! வாழ்கவே! தலைவர் கலைஞர் வாழ்கவே!” என்றும் “எழுந்துவா தலைவா எழுந்து வா!” என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.
தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆயினும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கலைஞர் கருணாநிதி விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் தொண்டர்கள் தொடர்ந்து காத்துக்கிடக்கின்றனர்.