ஸ்டெர்லைட் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் விரைவில் சம்ர்ப்பிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி-யிடம் சட்ட ஆவணங்களை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலையை மூடியது. மேலும், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, அது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், ‘போராட்டத்தின் போது துப்பாக்கிசூடு நடத்த வெறுமனே உத்தரவிடப்பட்டதா அல்லது எழுத்துபூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா? போராட்டம் நடந்த அன்று 144 தடை சட்டம் போடப்பட்டிருந்தது உள்ளூர் மக்களுக்கு சரிவர தெரியபடுத்தப்பட்டதா? இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்’ என்று சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது.