நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நாதெள்ளா நிறுவனம் கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் போலியான இருப்புகளை காண்பித்து அதன் மூலம் வங்கியில் ரூ. 380 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கடந்த மார்ச் மாதம் வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் ரூ. 380 கோடி மோசடி செய்தது குறித்து அந்நிறுவனம் மீது சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகார் குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் வழக்குப்பதிவை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் நாதெள்ளா நிறுவனத்திற்கு சொந்தமான நகைகடைகள் தாம்பரம், அண்ணாநகர், உத்தண்டியில் உள்ள சொகுசு பங்களா, விற்பனை வளாகங்கள், தி.நகரில் உள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 37 அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. மொத்தமாக ரூ.328 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.