ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கம் சார்பில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, "அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார். அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும்" என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் வராததையும் விமர்சித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், "நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஆரோக்கியமான முறை அல்ல. அப்படி பேசிய ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பது தெரிகிறது." என விமர்சித்தார்
"அரசியல் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா? அப்போது பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். அவர்கள் மறைந்தபிறகு இப்போது பேசுவது கோழைத்தனமானது. மறைந்த தலைவரின் இறப்பை சாதகமாக்கிக்கொள்ள ரஜினி நினைக்கிறார்." என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
"ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசிஇருந்தால் அவர் நடமாடி இருக்க முடியுமா" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
"அரசு சார்பில், அனைத்து மரியாதையும், பாதுகாப்பும் கருணாநிதி மருத்துவமனையில் இருந்த போது வழங்கப்பட்டது. அதேபோல் அவர் இறந்த பிறகும் கூட என்ன செய்ய வேண்டிமோ அதை அரசு செய்தது." எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.