ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு இந்து கோவில்கள் நடை சாத்தப்படுவதில்லை. இது ஆகம விதிகளுக்கு எதிராக இருப்பதால் இதற்கு தடை விதிக்கக்கோரி வழக்குரைஞர் அஸ்வத்தாமன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசு பிறப்பித்த ஒரு உத்தரவையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த வழக்கு வியாழனன்று (டிச. 28) நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக அரசின் கருத்தை அறியாமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் தடை விதிக்க மறுத்து விட்டனர்.
மேலும், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.