தமிழகத்தில் வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தமிழகத்திற்கு விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 7ம் தேதி மிக அதிகளவில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக சென்னை, உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று முதல் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. கனமழையால், சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவியை தமிழக அரசு நாடியது. இதனால், ஐந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக அரக்கோணத்தில் இருந்து நீலகிரி, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்தனர்.
அதாவது, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு மீட்புக்குழுவும், கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு 2 மீட்புக்குழுவினரும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்புக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களுக்கு சென்று, அங்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தயார் நிலையில் இருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.