பெங்களூரு மாநகராட்சியின் புதிய துணை மேயராக 3ம் தேதி பதவியேற்ற ரமிலா உமாசங்கர், மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.
சமீபத்தில் பெங்களூரு மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரமிலா உமாசங்கர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த இவர், காவேரிபுரா பகுதியிலிருந்து மாநகராட்சி உறுப்பினராக வெற்றி பெற்றார். செப்டம்பர் 28ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பின்னர் இவர் துணை மேயராகவும் தேர்வானார்.
வியாழன் அன்று துணை முதல்வர் பரமேஸ்வரராவுடன் கே.ஆர். மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்த பின்னர் முதல் அமைச்சர் குமாரசாமியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு 'நம்ம மெட்ரோ'வில் துணை மேயர் பயணித்தார்.
இரவு கடும் நெஞ்சுவலியினால் அவதிப்பட்ட அவர் வெள்ளி அதிகாலை 12:45 வீட்டின் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார். துணை மேயர் ரமிலா உமாசங்கருக்கு இருதயத்தில் பிரச்னை இருப்பற்கான அறிகுறி இதுவரை தென்பட்டதில்லை கூறப்படுகிறது.
மரணமடைந்த துணை மேயருக்கு உதயசங்கர் என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர் முதன்முறையாக மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைட்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் தைரியத்தையும் வலிமையையும் இறைவன் அருளட்டும்" என்று கர்நாடக முதல் அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கட்சிக்கும் சமுதாயத்துக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் ரமிலா உமாசங்கர் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.