சென்னை கோபாலபுரம் மற்றும் போயஸ் கார்டனில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலை தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னா் தொழில் அதிபா் ரன்வீா் ஷா வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் சாமி சிலைகள், தூண்கள் உள்ளிட்ட பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமாக ரன்வீா் ஷாவிற்கு சொந்தமான 3 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சாமி சிலைகள் உள்ளிட்ட 132 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையானவை சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்டவை என்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் தெரிவித்திருந்தனா். மேலும் இவை அனைத்தும் கோவில்களுக்குச் சொந்தமான பழங்கால பொருட்கள் என்றும் அவா்கள் தெரிவித்திருந்தனா்.
இதைத் தொடர்ந்து பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்னை கோபாலபுரம் மற்றும் போயஸ்கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். போயஸ்கார்டன்கஸ்தூரி அவென்யூவில் உள்ள வீடு ஒன்றில் மண்ணில் புதைக்கப்பட்ட சிலைகளை சிலை தடுப்புப் பிரிவினர் தோண்டி எடுத்து வருகின்றனர்.
அந்த வீடு யாருடையது என்ற தகவலை இதுவரை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து அங்கு 8 போலீஸ் கொண்ட குழுவால் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் போயஸ் கார்டனில் நடைபெறும் சோதனை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, நடிகர் ரஜினிகாந்த் வீடுகள் அமைந்துள்ளன மேலும் பல செல்வந்தர்கள் வசிக்கும் கூடிய பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.