பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 800 ரூபாய் கையூட்டு பெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பட்டுசாமி (வயது 65). இவருடன் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன் (வயது 61). இருவரும் பணியில் இருந்தபோது 2008 மே மாதம் 5ம் தேதி கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
சிதம்பரத்தை அடுத்த கீழ்பதியை சேர்ந்த பசுபதி என்பவர் தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். உரிய சான்றிதழுக்காக அவர் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியபோது ராதாகிருஷ்ணன் ரூ.800 லஞ்சமாக கேட்டாராம். இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கு 10 ஆண்டுகள் 111 நாள்கள் நடந்த நிலையில் புதன்கிழமை அன்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பு வழங்கினார்.
அத்தீர்ப்பில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பட்டுசாமிக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம், ஓய்வு பெற்ற எழுத்தர் ராதாகிருஷ்ணனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அலுவலக உதவியாளர் இளைபெருமாளை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.