ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருப்பது பற்றி தெரியாத முட்டாள் அல்ல நான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று ரஜினிகாந்திடம், 7 தமிழர் விடுதலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, யார் அந்த 7 பேர் என ரஜினிகாந்த் குதர்க்கமான பதிலைத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கப்படுகிறதே; அப்படியானால் பாஜக ஆபத்தான கட்சியா? என்கிற கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்தால் கண்டிப்பாக அப்படித்தான் இருக்கும் என குழப்பமான பதிலை கூறியிருந்தார்.
இந்த இரு பதில்களும் அரசியல் அரங்கத்தில் பெரும் சர்ச்சையாகின. இதையடுத்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருப்பது பற்றிய தெரியாத முட்டாள் அல்ல நான். எனக்கு தெரிந்தால் தெரியும்; இல்லையெனில் தெரியாது என்று சொல்லிவிடுவேன்.
நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து. திடீரென 7 பேர் விடுதலை குறித்து கேள்வி கேட்டதால் நான் திணறிவிட்டேன். பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் பேசி ஆறுதல் கூறியிருந்தேன்.
10 கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை எதிர்க்கிறது எனில் யார் பலசாலியாக இருக்க முடியும்? அப்படி எனில் எந்த கட்சி பலசாலி என்பதை புரிந்து கொள்ளலாம். எதிர்க்கட்சிகளுக்குத்தான் பாஜக ஆபத்தான கட்சி. அந்த கட்சி ஆபத்தானதா? இல்லையா என்பதை பற்றி நான் சொல்ல முடியாது. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அரசியலில் முழுமையாக இன்னமும் நான் இறங்கவில்லை. அதனால்தான் பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பதை என்னால் சொல்ல முடியாது.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.