கஜா புயலின் வேகம் சற்று குறைந்துள்ளதால், ஆந்திரா மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்பப் பெற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. கஜா என்று பெயர் சூட்டியுள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 720 கி.மீ., தொலைவில் உருவாகியுள்ளது. இது, வரும் 15ம் தேதி கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்றும், இன்னும் சில மணி நேரத்தில் புயல் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், வட மேற்கு திசையை நோக்கி நகரும் கஜா புயல், இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3 நாட்களில் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி புயல் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்எதிரொலியால், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வரும் 15ம் தேதி கனமழை பெய்யும் என்றும் 14ம் தேதி மாலை முதல் தெற்கு ஆந்திரா & வட தமிழகத்திற்கு இடையே, கஜா புயல் கரைரை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்காக, ஆந்திரா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்த புயல், காலை நிலவரப்படி 5 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. புயலின் வேகம் சற்று குறைந்துள்ளதால் ஆந்திரா மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்பப் பெறப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.