அதிமுகவில் தங்களது அணியை சேர்ந்த சீனியர்களுக்கு முக்கியத்துவம் மட்டும் அல்ல மரியாதையும் கிடைக்கவில்லை என ஓபிஎஸ் அணியினர் புலம்புகின்றனராம்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த போதும் ஓபிஎஸ் அணி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜன் தவிர வேறு யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை என்பதில் இருந்தே இந்த புகைச்சல் தொடங்கியது.
அதிமுகவையும் அரசையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கொங்கு தரப்பு படு கவனமாக இருந்து வருகிறது. ஓபிஎஸ்-ஸை பொறுத்தவரையில் துணை முதல்வர் என்கிற அடிப்படையில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
அதேநேரத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த சீனியர்கள் யாரையும் கொங்கு தரப்பு மதிப்பதே இல்லையாம். கடந்த வாரம் முதல்வர் எடப்பாடியுடன் கொங்கு அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் போது ஓபிஎஸ் இருக்கக் கூடாது என்பதற்காகவே அவரை வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துவிட்டனராம். ஓபிஎஸ்ஸும் வேண்டா வெறுப்பாக அந்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்.
கோட்டையில் ஓபிஎஸ் இல்லை என்பது தெரியாமல் வடமாட்ட சீனியர் ஒருவர் கோட்டைக்குப் போயிருக்கிறார். சுமார் 1 மணிநேர காத்திருப்புக்குப் பின் முதல்வர் அறையில் இருந்து வெளியே வந்த கொங்கு அமைச்சர்கள், என்னங்க அண்ணே உள்ளே வந்திருக்கலாமே என கேட்டுவிட்டு நகர்ந்திருக்கின்றனர்.
1 மணிநேரமாக தாம் காத்திருப்பது தெரிந்தும் உள்ளே கூப்பிடாமல் இப்ப வந்து பேசுகிறார்களே என குமுறியிருக்கிறார் அந்த சீனியர். இப்படியே போனால் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலையை தம்மை சந்திப்பவர்களிடம் கொட்டி தீர்த்து வருகிறாராம் அந்த வடமாவட்ட அதிமுக சீனியர்.
-எழில் பிரதீபன்