திமுகவின் முக்கிய புள்ளிகள் மீது கடும்கோபத்தில் இருக்கிறார் தென்மண்டலத்தில் கோலோச்சி வந்த அழகிரி. ' கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். தேர்தலுக்காக அண்ணன் வெயிட்டிங்' என்கின்றனர் அவரது அடிப்பொடிகள்.
கோபாலபுரம் வீட்டில் தயாளு அம்மாவைச் சந்திப்பதற்காக மட்டுமே அவ்வப்போது வந்து செல்கிறார் மு.க.அழகிரி.
மீண்டும் கழகத்துக்குள் அடியெடுத்து வைக்க நினைத்தவருக்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டார் ஸ்டாலின். இதனால் ஆவேசப்பட்டவர் மெரினா கடற்கரையை நோக்கி பேரணி ஒன்றையும் நடத்தினார்.
இந்தப் பேரணிக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. இதன்பிறகு திருவாரூரில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கே சென்று அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.
பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திலும் கலங்கினார். இந்தக் காட்சிகளை எல்லாம் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
கடைசியாக திண்டுக்கல்லில் கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தை நடத்தினார். அதேநேரம், திமுக அறக்கட்டளையில் நடக்கும் விளையாட்டுகளையும் அவர் கவனித்து வருகிறார் என்கின்றனர் மதுரை பொறுப்பாளர்கள்.
இதுதொடர்பாகப் பேசும் அவர்கள், ' அழகிரி அண்ணனின் வருகைக்குக் குடும்பத்தினர் ஆதரவு கொடுத்தாலும் திமுக பொறுப்பாளர்கள் சிலர் விரும்பவில்லை. அவர் வந்துவிட்டால், நம்முடைய ஆட்டம் அடங்கிவிடும் என நினைப்பதுதான் பிரதான காரணம்.
இதில் பண விஷயமும் அடங்கியிருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் அன்அக்கவுண்டாக வரக் கூடிய பணத்தையெல்லாம் முரசொலி அறக்கட்டளையின் வரவில்தான் சேர்த்துள்ளனர். இந்தப் பணத்தைக் கையாளும் இடத்தில் அறங்காவலராக உதயநிதி இருக்கிறார்.
இந்தப் பணத்தை வேறுவழிகளில் வட்டிக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் திருவண்ணாமலைப் புள்ளி. அந்தப் பிரமுகரின் கட்டுப்பாட்டில்தான் ஸ்டாலின் குடும்பமே இருக்கிறது.
இந்தப் பணத்தை வைத்துத்தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்களை எடுத்து வருகிறது.
படம் தோல்வியடைந்தாலும் அதனால் இவர்களுக்கு நட்டம் இல்லை. இந்த அறக்கட்டளையில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் புழங்கி வருகிறது என்கிறார்கள்.
அழகிரி அண்ணன் கட்சிக்குள் வந்துவிட்டால், இந்தக் கணக்குகளைத் தோண்டியெடுத்துவிடுவார் என அவர்கள் பயப்படுகின்றனர். எனவேதான், அண்ணனுக்கு எதிராக ஸ்டாலினிடம் தொடர்ந்து தூபம் போடுகின்றனர். கட்சிக்குள் இல்லாவிட்டாலும், ஸ்லீப்பர் செல்கள் மூலம் அறக்கட்டளையில் நடப்பதை அறிந்து வருகிறார் அழகிரி.
இந்தக் கணக்கு வழக்குகளை எல்லாம் விரைவில் வெளியுலகின் பார்வைக்கு வைப்பார். தேர்தலின்போது தென்மண்டலத்தில் ஸ்டாலினுக்கு தன்னுடைய வலுவைக் காட்டுவதில் அவர் உறுதியாக இருக்கிறார்' எனக் காட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
-அருள் திலீபன்