ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
அதேநேரத்தில் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரை விடுதலை செய்யும் பரிந்துரையை ஏற்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழருக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கத்துடன் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தார். இந்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு தரும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இன்று வைகோ தலைமையில் சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் திமுகவின் மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆளுநரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.