ஸ்டாலின் மீது பெரும் கோபத்தில் இருக்கிறார்களாம் பாமகவினர். ' முந்தைய காலகட்டங்களில் நம் மீது கோபம் இருந்தால் வீரபாண்டியாரையோ, வெற்றிகொண்டானையோ பேச வைப்பார் கருணாநிதி. ஆ.ராசாவைப் பேசவைத்து அவமானப்படுத்திவிட்டார் ஸ்டாலின்' என ஆத்திரத்தைக் கொட்டியுள்ளனர் தைலாபுரத்தில் உள்ளவர்கள்.
துரைமுருகனின் கூட்டணி பேச்சின் மூலம், 'திருமாவளவனை வெளியே தள்ளிவிட்டு, ராமதாஸை உள்ளே சேர்க்கப் போகிறார்கள்' என்ற பேச்சு வந்தது. இது அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
தலித் அரசியல்வாதிகள் மத்தியிலும் பட்டிமன்றம் நடந்தது. இதைப் பற்றி திமுக தலைமையிடம் பேசிய சிலர், ' பாமகவைப் பயன்படுத்தி உங்களிடம் அதிகார அரசியல் நடத்தப் பார்க்கிறார் துரைமுருகன். அதற்காகத்தான் இப்படியொரு பீடிகையைப் போடுகிறார்.
பாமகவால் நமக்கு என்ன லாபம்? பாமக அதிக வாக்குகள் எடுத்த ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஆறில் நாம்தான் லீடிங்கில் இருக்கிறோம். அதிலும், தர்மபுரியில் 25 சதவீதம், கடலூர் 16 சதவீதம், அரக்கோணம் 16 சதவீதம், சிதம்பரம் 17 சதவீதம், ஆரணி 16 சதவீதம், சேலம் 15 சதவீதம் எனக் கூடுதலாக எடுத்திருக்கிறோம். சேலத்தில் 50 சதவீத வாக்குகளை அதிமுக நெருங்கிவிட்டது.
பாமகவை நம்மோடு சேர்த்தாலும் சேலத்தில் அதிமுக வாக்குகளைப் பிரிக்க முடியாது. சேலம் ஒரு தொகுதிக்காக பாமகவிடம் நாம் போக வேண்டுமா? பாமகவை உள்ளே கொண்டு வந்து பிற்காலத்தில் அரசியல் ஆட்டம் ஆட முடிவு செய்திருக்கிறார் துரைமுருகன்' எனப் பேசியுள்ளனர்.
இதையெல்லாம் அலசிப் பார்த்துத்தான் ராமதாஸ் வருகைக்கு முட்டுக்கட்டை போட்டார் ஸ்டாலின். 'பாமகவும் தேமுதிகவும் வேண்டாம், அவர்கள் வந்தால் எங்கள் தன்மானத்துக்கே இழுக்கு. சுயமரியாதைக்கே சூடு' எனக் கோபம் கொப்பளிக்கப் பேசினார் ராசா.
இதற்குப் பிரேமலதா பதில் கூறிவிட்டார். பாமக பதில் கூறாமல் இருப்பது ஏன் என அக்கட்சியின் நிர்வாகிகள் கேட்கின்றனர். ஆனால், ராமதாஸோ, ' நம்மை விமர்சிக்க நம்முடைய சமூக ஆட்களைத்தான் ஏவிவிடுவார் கருணாநிதி. ஆனால், ராசாவைப் பேச வைத்து நம்மை அவமானப்படுத்திவிட்டார்' எனக் கொதித்தாராம்.
இதை அறிந்து கமெண்ட் அடித்த எ.வ.வேலு, 'நாம் ஏமாந்துவிடுவோம் என ராமதாஸ் எதிர்பார்த்தார்' எனப் பேசியிருக்கிறார். ஆனால், வேறு சில வடமாவட்ட திமுகவினரோ, ' பாமக வேண்டாம் எனச் சொன்னது சரிதான். அதை ராசா மூலமாகப் பேசியிருக்கக் கூடாது. அவர் மூலமாக நம்மை அவமானப்படுத்திவிட்டார் என பாமக பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டது. இது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' எனப் பேசியுள்ளனர்.
- அருள் திலீபன்