சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சிலைகளின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் சிலை திறப்பு விழாவும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
இருவருமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையில் கட்சி சார்ந்த சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நேரம் ஒதுக்கி விட்டதாகவும் நாளைதான் கமல்ஹாசன் சென்னை திரும்புகிறார் எனவும் கூறப்படுகிறது.