சட்டசபையில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்... அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

MK Stalin thanks to AIADMK Govt

Jan 3, 2019, 15:35 PM IST

கோட்டம்  முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தலைவர் கருணாநிதிக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி தலைவரின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதியின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

வாழ்ந்த நாள்களில் பாதி நாள்களுக்கு மேல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தொடக்கம் முதல் இறுதி வரை விவாதங்களில் பங்கேற்று அவை நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் தந்தவர். மக்கள் பணியே மகேசன் பணி என்ற இலட்சியத்திற்காக தொண்டாற்றிய தலைவருக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5 முறை முதல்வராக 19 ஆண்டுகள் நாடும், ஏடும், வீடும் ஏற்றிப் போற்றிட நற்பணியாற்றியவர்.

ஏராளமான திட்டங்கள், சட்டங்கள், கணக்கிலடங்கா உதவிகள், சலுகைகள், பல்கலைக்கழகங்கள், பாலங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த சிற்பி தான் தலைவர் .அப்படிப் பட்ட தலைவரின் காந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருந்த இந்தப் பேரவையில் நினைவுகளாய் நீக்கமற நிறைந்துள்ளார்.

அத்தகைய தலைவரின் மறைவையொட்டி இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் அவர் பெருமையைப் பேசிய முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராமசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவக்கும் திமுக தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற தனிப்பட்ட முறையிலும் தலைதாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு, சபாநாயகர் அறைக்கு நேரில் சென்று கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்காக, சபாநாயகர், முதலமைச்சர் – துணை முதலமைச்சர் ஆகியோருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

You'r reading சட்டசபையில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்... அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை