சிலைக் கடத்தல் வழக்கில் தமிழக அரசின் போக்குக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நீதித்துறை அவசர நிலையை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யா க இருந்த பொன்.மாணிக்கவேல் அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் நடந்த பல்வேறு சிலைத் திருட்டுகளை கண்டுபிடித்தார். ஆனால் அரசுத் தரப்பில் அவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற சர்ச்சை தொடர்ந்தது. பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறும் நேரத்தில் அவருக்கு நீதிமன்றமே ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.
தமக்கு அரசுத் தரப்பிலும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடமும் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அலுவலகமும் ஒதுக்கவில்லை என கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் முறையிட்டார். போதிய ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தமக்கு இன்னும் அரசுத் தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை, அலுவலமும் ஒதுக்க வில்லை என மீண்டும் முறையிட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடரப்பட்டது முதலே அரசின் போக்கு சரியில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் இதே நிலை தொடருமானால் நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.