தொலைபேசி எண்கள் குறித்த தகவலுக்கான ட்ரூகாலர் செயலியும் (Truecaller app), பேருந்து பயணச்சீட்டு முன்பதிவுக்கான ரெட்பஸ் செயலியும் (Redbus)இணைந்து இயங்க உள்ளன. அதன்படி ட்ரூகாலர் செயலியின் பணம் செலுத்துதல் பிரிவில் ரெட்பஸ் சிறுசெயலியாக (Mini app) சேர்க்கப்பட்டுள்ளது.
நம்மை அழைப்பவர் யார் என்ற விவரத்தை ட்ரூகாலர் என்ற செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். இது சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனமாகும். யூபிஐ என்னும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface) மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் ட்ரூகாலரில் கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பும் ஊர்களுக்கு பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் ரெட்பஸ் நிறுவனத்தின் சேவை தற்போது ட்ரூகாலர் மூலமும் வழங்கப்படுகிறது. ட்ரூகாலர் பயனர், தமது பயனர் கணக்கு மற்றும் கடவுசொல்லை பயன்படுத்தி ட்ரூகாலர் செயலி மூலம் பேருந்தில் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு வழிவகுக்கும் வண்ணம் ட்ரூகாலர் செயலியில் ரெட்பஸ் சிறுசெயலி இணைக்கப்பட்டுள்ளது.
இருக்கை பதிவு செய்வதற்கும், பணம் செலுத்துவதற்கும் வெவ்வேறு செயலி மற்றும் வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரே செயலி மூலம் எளிதான முறையில் இருக்கை முன்பதிவு செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ட்ரூகாலர் நிறுவனத்தின் துணை தலைவர் சோனி ஜாய் மற்றும் ரெட்பஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அனூப் மேனன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.