தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன், அங்குள்ள காய்கறி சந்தைக்கு சென்று, மக்களுடன் மக்களாக காய்கறிகளை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் – 2019, வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்து கட்சியினரும், தங்களால் முடிந்த வண்ணம் புதிய புதிய முயற்சிகளை மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மக்களுடன் மக்களாக ஒன்றாக கலந்து உரையாடி வருகிறார். தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தூத்துக்குடி மக்களின் பல துயரங்கள் துடைக்கப்படும் போன்ற உறுதிமொழிகளையும் கூறி வருகிறார்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு காய்கறி சந்தைக்கு சென்ற தமிழிசை, கருணைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை கடைக்காரர்களிடம் வாங்கினார். அவர்களிடம் மறக்காமல் வரும் மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.
அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளார்.
தமிழிசை தனது வேட்புமனுவில் தனக்கு 2 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியின் சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.