சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் ஒன்று வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பீட்டா வடிவில் முதன்முதலாக பயன்பாட்டுக்கு வந்த இவ்வசதி விரைவில் இணைய வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் KaiOS தளங்களில் இயங்கும் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் பதிவுகள் குறித்த நாள்களுக்கு பின்னர் மறைந்துவிடுவதற்கு இவ்வசதி உதவி செய்கிறது. இவ்வசதியை தெரிவு செய்து அனுப்பப்படும் பதிவுகள் ஏழு நாள்களுக்குப் பின்னர் தாமாகவே அழிந்துவிடும். தனிப்பட்ட தொடர்பு மற்றும் குழு தொடர்புகளில் இவ்வசதியை பயன்படுத்த முடியும். குழுக்களை பொறுத்தமட்டில் நிர்வாகி (அட்மின்) மட்டுமே இவ்வசதியை பயன்படுத்த முடியும். ஒரு பயனருக்கு இவ்வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும் பதிவு, அவர் ஏழு நாள்களில் வாட்ஸ்அப்பை திறக்காவிட்டாலும் அழிந்துவிடும். ஆனாலும் வாட்ஸ்அப் திறக்கப்படும் வரைக்கும் அறிவிக்கையில் (நோட்டிஃபிகேஷன்) அது காணப்படும்.
வீடியோ போன்ற மீடியாவுடன் அனுப்பப்படும் பதிவுகளுக்கும் தானாக மறையும் வசதியை தெரிந்தெடுக்க முடியும். ஆனால், ஸ்மார்ட்போனில் தானாக பதிவிறக்கம் (ஆட்டோடவுண்லோடு) செய்யும் முறை தெரிவாகியிருந்தால் அந்த மீடியா கோப்பு பதிவிறக்கமாகிவிடும். ஏழு நாள்களுக்குப் பிறகு வாட்ஸ்அப் செய்திகள் தானாகவே அழிந்துவிடக்கூடிய இவ்வசதி எப் போது பயன்பாட்டுக்கு வரும் என்று இன்னும் உறுதியாகக் கூறப்படவில்லை.