இந்த அறிகுறிகள் இருக்கின்றனவா? உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்!

கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். உலகம் இன்று அந்த நிலைக்கு வந்துவிட்டது. ஆகவே, வழிப்பறி செய்வது, வீடு புகுந்து திருடுவது போன்று போன்களின் செயல்பாட்டை தங்கள் வசப்படுத்தி (ஹேக்) மோசடி செய்பவர்களும் பெருகிவிட்டனர். "நான் எல்லாம் அவ்வளவு பெரிய ஆளு இல்லைங்க... என் போனை ஹேக் பண்ணி என்ன செய்திடுவாங்க?" என்று கேட்கிறீர்களா? உங்கள் போன் மோசடிக்காரர்களுக்கு தகவல் சுரங்கம் போன்றது. நம்முடைய கணினி, மடிக்கணிணி மற்றும் ஸ்மார்ட்போன்களை நாம் தினமும் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆகவே, நம்முடைய போனின் செயல்பாட்டை யாராவது வசப்படுத்தினால் அதிலுள்ள மின்னஞ்சல் முகவரிகள், தொடர்பு பட்டியலிலுள்ள போன் எண்கள், படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், குறுஞ்செய்திகள் எல்லாமே அவர்கள் வசம் சென்று விடும். நம் கீபோர்டில் எந்த பொத்தானை அழுத்துகிறோம் என்பதையும் ஹேக்கர்கள் கவனிக்கமுடியும். அப்படியானால், அவர்கள் பாஸ்வேர்டு, தனிப்பட்ட தகவல், கிரடிட் கார்டு விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள முடியும்.

போன் 'ஹேக்' (hack) செய்யப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளங்கள்

போனின் செயல்பாட்டு வேகம் குறைவது, வித்தியாசமான எச்சரிக்கைகள், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட பல அறிகுறிகள் மூலம் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் அவை நாம் அலட்சியமாக கடந்து செல்லுமளவுக்கு சிறிய அளவில் இருக்கும். அவற்றை புறக்கணிக்காமல் கவனித்தால் நம்மை மோசடியாளர்கள் கண்காணிக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளலாம்.

வேகமாக தீரும் பேட்டரி

நீங்கள் எவ்வளவுதான் சார்ஜ் செய்து வைத்திருந்தாலும் உங்கள் போனின் பேட்டரி சீக்கிரமாக மின்னாற்றலை இழந்தால் (drain) உங்கள் ஐபோனோ, ஆண்ட்ராய்டு போனோ ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஐயப்படலாம். ஹேக் செய்யப்படும் போனின் ஸ்பைவேர் (spyware) எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும். ஆகவே, போனின் சார்ஜ் குறையும். அப்படி ஹேக் செய்யப்படவில்லையென்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் மின்கலத்தை அல்லது போனையே மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளலாம்.

சூடாகும் போன்

ஹேக் செய்யப்பட்டிருக்கும் போனின் பேட்டரி விரைவில் ஆற்றலை இழப்பதுபோல, அந்த ஸ்மார்ட்போன் சூடாகவே இருக்கும். போனின் டேட்டா எப்போதும் பயன்படுத்தப்படுவதால் வழக்கத்திற்கு மாறாக போன் வெப்பமாகும். தாங்கள் உபயோகப்படுத்தும் அளவை விட டேட்டா அதிகமாக செலவாகியிருந்தால் பயனர்கள் எச்சரிக்கையடைய வேண்டியது அவசியம்.

வேகம் குறையும் போன்

உங்கள் போனின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதாக என்பதை கவனிக்கவும். அதில் ஃபைல்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்தாலும் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஐயப்படலாம். உங்கள் ஸ்மார்ட்போனை 'ஷட்டவுண்' செய்யும்போது போன் ஆஃப் ஆகாமல் அல்லது சரியாக ஷட்டவுண் ஆகாமல் இருந்தாலும் மற்றவர்கள் அதன் செயல்பாட்டை தங்கள் வசப்படுத்தி உள்ளார்கள் என்பதை கண்டுகொள்ளலாம். உங்கள் ஐபோனாக இருக்கட்டும்; ஆண்ட்ராய்டு போனாக இருக்கட்டும் குறுஞ்செய்திகளை அனுப்புதல், மற்றவர்களை அழைத்தல் உள்ளிட்ட எல்லா செயல்பாடுகளும் வேகம் குறைந்தால் அது ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

டேட்டாவின் அதிக பயன்பாடு

டேட்டா யூசேஜ் உள்ளிட்ட தரவு பயன்பாட்டு அளவை காண்பிக்கக்கூடிய செயலிகள் மூலம் உங்கள் போனிலிருந்து வெளியே எவ்வளவு டேட்டா அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். வழக்கத்திற்கு மாறான டேட்டா பயன்பாடு அல்லது அதிக நேரம் அப்லோடு செய்யப்பட்டது இவை தெரிந்தால் உஷாராக வேண்டும். பொதுவாக அனைவருக்குமே தாங்கள் மாதந்தோறும் எந்த அளவுக்கு டேட்டாவை பயன்படுத்துவோம் என்பது தெரியும். அதையும் தாண்டி செலவாகும் டேட்டாவை கண்காணியுங்கள்.

நீங்கள் செய்யாத அழைப்புகள்

நீங்கள் அழைக்காத நபரை அழைத்த விவரம், நீங்கள் அனுப்பாத குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட விவரங்கள் உங்கள் போனில் காண கிடைத்தால் உடனே அலர்ட் ஆகுங்கள். ப்ரீமியம் ரேட் எண்கள் எனப்படும் உயர்கட்டண எண்களை உங்கள் போன் மூலம் தொடர்பு கொள்ள வைக்கக்கூடிய மால்வேர் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

தேவையற்ற பாப்-அப்கள்

எல்லா பாப்-அப்களும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறிகள் அல்ல என்றாலும் உங்கள் போனில் adware என்ற மால்வேர் நிறுவப்பட்டிருந்தால் தேவையற்ற பாப்-அப் (pop-up)களை அனுமதிக்கும். அவை தேவையற்ற இணையதளங்களை உங்கள் போன் மூலம் திறக்கச்செய்து, அந்த தளங்களுக்கு வருவாயை ஈட்டித் தரும்.

தென்படும் புதிய செயலிகள்

நீங்கள் தரவிறக்கம் செய்யாத வித்தியாசமான செயலிகள் உங்கள் போனில் இருந்தால், அவை மோசடியான நிரல்களை (மால்வேர்) அனுமதிக்கும். உங்கள் பேட்டரி தீர்ந்துபோவதற்கும் இவையே காரணமாகும்.

ஜிமெயில், ஐகிளவுட் கணக்குகள்

உங்கள் ஸ்மார்ட்போனை வசப்படுத்தும் மோசடியாளர்களுக்கு எவற்றில் கைவைக்கவேண்டும்எ ன்று தெரியும். உங்கள் ஜிமெயில் மற்றும் ஐகிளவுட் கணக்குகளை பயன்படுத்தி உநீங்கள் கடவுச்சொல் (பாஸ்வேர்டு), புகைப்படங்கள், தற்போதைய இருப்பிடம், அழைப்பு பட்டியல் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் உங்கள் அடையாளத்தையே (identity) அவர்கள் திருடுவார்கள். உங்கள் மின்னஞ்சல் கணக்கு, ஃபேஸ்புக் கணகக்கு ஆகியவை புதிய சாதனங்களிலிருந்து இயக்கப்படுவதாக எச்சரிக்கை செய்தி வந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்.

போனில் சிக்னல் இருக்காது

திடீரென உங்கள் ஸ்மார்ட்போனில் சிக்னல் இல்லாமல் போகலாம். இதை நம்பர் போர்ட்டிங் அட்டாக் (Number porting attack) என்று கூறுவார்கள். ஆண்ட்ராய்டு, ஐபோன் உள்ளிட்ட எவ்வகை சாதனங்களும் இதற்குத் தப்பாது. உங்கள் கணக்கு மாற்றப்படுவதாக எச்சரிக்கை செய்தி வரும். அடுத்த அரைமணி நேரத்தில் உங்கள் போன் சிக்னலை இழந்துவிடும். இந்த நிலை ஏற்பட்டால் உங்கள் எண் திருடப்பட்டதாக காவல்துறையிடம் புகார் தெரிவிப்பதே புத்திசாலித்தனம்.

ஸ்மார்ட்போன் 'ஹேக்' செய்யப்படுவது எப்படி?

தேவையற்ற இணைப்புகளை சொடுக்குதல் உங்களுக்கு அறிமுகமான நபர் அல்லது உறவினர் அனுப்பியதுபோன்று ஒரு பிடிஎஃப் அல்லது புகைப்படத்திற்கான இணைப்பை அனுப்புவார்கள். அதை நீங்கள் திறந்துவிட்டால் டிரோஜன் என்னும் குதிரை நிரல் (Trojan - horse program) உள்ளிறங்கி உங்கள் முழு போனையும் கைப்பற்றிவிடும். அதன் மூலம் மோசடி பேர்வழிகள் கைவரிசை காட்டுவர். ஆகவே, உங்களுக்கு அறிமுகமானவரோ, நண்பரோ தாம் இப்படி ஒன்றை அனுப்பியதாக உறுதி செய்யாவிட்டால் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை, படங்களை சொடுக்கவேண்டாம்.

பொது இடங்களில் சார்ஜ் செய்தல்

வீட்டை விட்டு வெளியே இருக்கும்போது எங்காவது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வசதி இருந்தால் உடனடியாக போய் போனை மாட்டுவது ஆபத்து. குறிப்பாக யூஎஸ்பி போர்ட் கொண்டு சார்ஜ் செய்யக்கூடாது. நேரடியாக மின்னிணைப்பிலிருந்து (AC) சார்ஜ் செய்யலாம். யூஎஸ்பி கேபிள்கள் சார்ஜ் செய்யும்போதே ஃபைல்களை இடமாற்றம் செய்யக்கூடியவை. அவற்றின் மூலம் மால்வேர்களை உங்கள் போனில் செலுத்தமுடியும். வாடகை கார்களில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யவேண்டாம்.

கட்டணமில்லாத வைஃபை இணைப்பை பயன்படுத்துதல்

கட்டணமில்லாத இலவச வைஃபை இணைப்பை நீங்கள் விரும்புவதுபோலவே, மோசடிக்காரர்களும் விரும்புவர். பாதுகாப்பற்ற வைஃபை இணைப்பை பயன்படுத்தினால் விபிஎன் என்னும் மெய்நிகர் தனி இணைப்பை உபயோகிக்கவும். பாதுகாப்பற்ற இணைய இணைப்பின் மூலம் வங்கி கணக்குகளை பயன்படுத்தினால் அவை மோசடியாளர்களிடம் போய் சேரக்கூடும். எந்த தளத்தின் மூலமும் பரிவர்த்தனை செய்தால் அந்த தளம் 'https://' என்று இருக்கவேண்டும். 'http://' என்று இருந்தால் அது பாதுகாப்பற்ற தளம். உங்கள் தகவல்கள் பொதுவெளிக்குச் செல்லும் அபாயம் உண்டு.

உங்கள் போன் 'ஹேக்' செய்யப்பட்டால்...

உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்பாட்டை மோசடி பேர்வழிகள் வசப்படுத்திவிட்டார்கள் என்பது உறுதியானால் பதற்றப்படாதீர்கள்.

பாஸ்வேர்டுகளை மாற்றுங்கள்

உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றின் பாஸ்வேர்டுகளை மாற்றுங்கள். அதை உங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் செய்யவேண்டாம். வேறு கணிணியில் இருந்து பாஸ்வேர்டுகளை மாற்றிவிடவும்.

பலபடி அனுமதி

உங்கள் போன் கைப்பற்றப்படாவிட்டாலும் இந்த multi-factor authentication என்ற பலபடி அனுமதியை பயன்படுத்துங்கள். ஃபேஸ்புக், கூகுள் மற்றும் பெரிய வங்கிகள் அனைத்துமே இந்த வசதியை தருகின்றன.

போன் ரெஸ்டோர்

Restore என்ற கட்டளை உங்கள் போனிலுள்ள எல்லா தகவல்களையும் அழித்துவிடும். பிறகு கூகுள், கிளவுட் சேமிப்பிலிருந்து உங்கள் தகவல்களை மீட்டெடுத்துக்கொள்ளலாம். உங்கள் சாதனம் எவ்வகை தயாரிப்பு என்பதை பொறுத்து வெவ்வேறு படிநிலைகளை பயன்படுத்தி தகவல்களை போனில் இறக்கிக்கொள்ளலாம்.

வங்கி கணக்கு, கார்டு விவரங்கள்

உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று கண்டுபிடித்தால் உடனடியாக உங்கள் வங்கி கணக்குகள் மற்றும் கிரடிட், டெபிட் கார்டுகளை முடக்கும்படி வங்கிகளுக்கு தகவல் அளிக்கவேண்டும். எச்சரிக்கையாக இருந்தால் எந்த மோசடிக்கும் தப்பலாம்!

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

READ MORE ABOUT :