விடலைக் காதலால் விபரீதம் : நெல்லை அருகே சிறுவன் அடித்துக் கொலை : இருவர் கைது.

by Balaji, Oct 8, 2020, 19:42 PM IST

நெல்லை வண்ணார்பேட்டையில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இரண்டு சிறுவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டி முப்பிடாதி , தம்பதியரின் மகன் இசக்கித்துரை. 17 வயதே ஆன இவர் ஐடிஐ படித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவது வழக்கமாம். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒருபெண்ணை இசக்கித்துரை மற்றும் அவரது நண்பர்கள் ஆதிநாராயணன் , மனோகரன் ஆகிய மூன்று பேரும் காதலிப்பதாக கூறிகொண்டதாக தெரிகிறது. இதனால் ஏற்கெனவே இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி இசக்கித்துரையை மற்ற நண்பர்கள் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஒரு தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆதிநாராயணன் மற்றும் மனோகர் ஆகிய இருவரும் இசக்கித்துரையை கம்பால் தாக்கி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இசக்கித்துரை உடலை அப்படியே போட்டுவிட்டு இருசக்கரவாகனத்தில் உடனடியாக புறப்பட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். கல்லிடைக்குறிச்சியில் வாகன சோதனையில் இருவரையும் பிடித்த போலீசார் குடிபோதையில் இருந்ததாக வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் . இதனையடுத்து இருவரும் பஸ் மூலம் நெல்லைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தன் மகன் இசக்கித்துரையை காணவில்லை லை என அவரது தாயார் முப்பிடாதி பல இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது இவர்கள் இருவரும் அவரோடு சேர்ந்து தேடியுள்ளனர். பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆதிநாராயணன் , மற்றும் மனோகர் ஆகிய இருவரும் இசக்கித்துரையை பைக்கில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது இசக்கிதுரையை அடித்துக் கொன்ற விபரத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் சொன்ன தகவலின் பேரில் கல்லிடைக்குறிச்சி சென்று உடலைக் கைப்பற்றிய போலீசார் அதை உடற் கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிநாராயணன் மற்றும் மனோகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும் 17 வயது என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடலை பருவ காதல் மோகத்தால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get your business listed on our directory >>More Tirunelveli News

அதிகம் படித்தவை