அமெரிக்காவில் காரில் சென்றபோது கரை புரண்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இந்தியாவை சேர்ந்த குடும்பத்தினரில், இறுதியாக சிறுவனின் உடலும் மீட்கப்பட்டது.
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்தவர் சந்தீப் (42). இந்தியரான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு, மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி சந்தீப் தனது குடும்பத்தினருடன் காரில் போர்ட்லேண்ட் நகருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென நான்கு பேரும் மாயமாகி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நான்கு பேரையும் தேடி வந்தனர். இதில், சந்தீப்பின் கார் ஹம்போல்ட் நகர் அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
இதில், சவுமியாவின் உடலை ஏல் நதியில் கார் அடித்துச் செல்லபட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13ம் தேதி கைப்பற்றி உள்ளனர். மேலும், அடித்து செல்லப்பட்ட காரின் பாகங்களும் சேகரிக்கப்பட்டன. மேலும், சந்தீப் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஏல் ஆற்றில் 4-6 அடி ஆழத்தில் சிக்கி இருந்த காருக்குள் இருந்து சவுமியாவின் கணவர் மற்றும் மகளின் சடலம் மீட்கப்பட்டது. இந்த கார், சவுமியாவை மீட்கப்பட்ட இடத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று பேரினது சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டது.ஆனால் , சவுமியாவின் மகனின் உடல் கிடைக்கவில்லை. இதனால், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கார் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 6 மைல் தூரத்தில் இருந்து சிறுவன் சித்தாந்த்தின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மீட்கப்பட்ட நான்கு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கை வெளிவந்த பிறகு அதற்கேற்ப விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.