மனைவி ஹசின் ஜஹான் கொடுத்த புகாரின் பேரில் முஹமது ஷமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், தனது முகநூல் பக்கத்தில் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, அந்தரங்க விஷயங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் சாட் விவரங்களை கசியவிட்டார்.
மேலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஹசின் ஜகான் அளித்துள்ள பேட்டியில், ஷமியின் இந்த கீழ்த்தரமான போக்கை தட்டிக் கேட்டதற்காக குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன் னை துன்புறுத்துவதாகவும், கொலை முயற்சி கூட நடந்ததாகவும் கூறினார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த முஹமது ஷமி, எனது புகழை கெடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், எனது திறமையை சீர்குலைக்கும் முயற்சியில் விரோதிகள் களமிறங்கியுள்ளனர் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலிஷபா என்ற பெண்ணிடம் பலமுறை பணம் வாங்கியுள்ளார். ஆனால் இந்த பணம் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் பதில் கூறாமல் மழுப்பி விடுகிறார் என ஷமியின் மனைவி ஹசின் ஜகான் புதிய தகவலை வெளியிட்டார்.
இதற்கிடையில், ஷமிக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டது. அவர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
ஹசின் ஜகான் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, குடும்ப வன்முறை, குற்றசதி, காயப்படுத்துதல், பலாத்காரம் ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்காகக் காத்திருந்தது. மேலும், தனக்கும் தனது மகளுக்கும் பராமரிப்பு செலவுக்காக மாதம் தோறும் ரூ.10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அலிப்பூர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்றுள்ள முகமது ஷமியை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.