கொரோனா பரவும் அபாயம்: வீட்டை வெளியில் போகாதீர்கள்.. வீடியோவில் கமல்ஹாசன் கோரிக்கை..

Actor Kamal haasan Talks About #Coronavirus

by Chandru, Mar 21, 2020, 13:48 PM IST

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று வீடியோவில் தோன்றி கொரோனா விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியதாவது:
கொரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது, ஐந்தாவது வாரத்தில் பன்மடங்கு அதிகமாவதாக பல நாடுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதனால்? வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாதபோது பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பல இடங்களுக்கு போய்க்கொண்டிருப்பார்கள். பாதிக்கப்பட்டது 5 பேர் என்றால் அந்த ஐந்து பேரிடமிருந்து 25 பேருக்குப் பரவும் இன்னும் 100 பேருக்குப் பரவாமல் தடுக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது சோசியல் டிஸ்டன்சிங் அதாவது விலகியிருத்தல்.

அதீத விழிப்புணர்வு கட்டமான 4வது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். அத்தியா வசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியில் செல்லுங்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலமாக வைரஸ் உங்களுக்குப் பரவாமலும் உங்களிடமிருந்து உங்கள் நெருக்கமானவர்களுக்குப் பரவாமலும் தடுக்கலாம். கொரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்பது கிடையாது ஆனால் வெகு சிலருக்கு அவர்கள் உடல் நிலையைப் பொறுத்து அது ஆபத்தானதாக மாறலாம். அதனால்தான் எல்லோரிடமிருந்தும் விலகி இருத்தல் அவசியம். வீட்டில் இருங்கள், குடும்பத்தோடு நேரத்தைச் செலவழியுங்கள் மனசுக்குப் பிடித்தவர்களிடம் தொலைப்பேசியில் தினமும் பேசுங்கள்.

ஆனால் வாங்க எல்லோரும் மீட் செய்யலாம் என்று கூப்பிட்டால் போய் விடாதீர்கள் ப்ளீஸ். அவர்களால் நமக்கோ, நம்மால் அவருக்கோ எதுவும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக இருக்க வேண்டும். வந்தால் செய்ய வேண்டியதை வரும்முன்பே செய்வோம். விலகி இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். நமக்கு ஒன்றும் வராது என்ற கண்மூடித்தன மான நம்பிக்கையினாலோ அசட்டுத் தைரியத்தாலோ இந்த நோய் பரவ நாம் காரணமாக இருக்கக்கூடாது. முன்னெச்சரிக்கைதான் முக்கியமான விஷயம். மறந்துவிடாதீர்கள்.


என்னையா இது வீட்டில் இருக்கச் சொல்கிறீர்கள். வருமானத்துக்கு என்ன பண்றது. மார்ச் ஏப்ரல் பசங்க ஸ்கூல் பீஸ் கட்டவேண்டுமே, ஆண்டு கட்டணம் கட்டவேண்டுமே என்று ஏகப்பட்ட குழப்பங்கள். நாளைக்கு வருமானம் வருமா? கடையெல்லாம் அடைச்சிருமே.. என்று நிறையக் கேள்விகள் இருந்தாலும் இதெல்லாமே செய்ய நீங்கள் உடல்நலத்தோடு இருப்பது அவசியம். அதனால் தான் இந்த 2 வாரம் மிக முக்கிய மானது. வேலை என்னவாகும், தொழில் என்னவாகும், பசங்க படிப்பு என்னவாகும் என்ற உங்கள் நியாயமான பயங்களைச் சற்று ஒதுக்கி வைத்து இந்த 2 வாரத்தை எப்படிச் சரியா பயன் படுத்துவது என்பதைப் பாருங்கள். இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. வேலை தொழில் என்று எப்பவுமே ஓடிக்கொண்டிருந்த ஆளாக நீங்கள் இருந்திருந்தால் உங்கள் குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடலாம். இத்தனை வருடம் நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங் களை உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள்.

நீங்கப் படிக்க நினைத்த புத்தகத்தைப் படியுங்கள். மிஸ் பண்ணப் படம், கற்றுக்கொள்ள நினைத்த இசை, டைம் இல்லை என்று நீங்கள் தள்ளிப்போட்ட அந்த போன்கால்ஸ் இப்போது பேசுங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் நேரத்தை செலவிடுங்கள், குழந்தைகளை ஆன்லைன் கோர்ஸில் சேர்த்து விடுங்கள் புது விஷயத்தை அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். அவசரக் கால சமையல் எப்படி என்பதை இப்போது சொல்லிக் கொடுங்கள். எந்திரமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் காலத்தின் கட்டாயத்தால் ஒரு சின்ன இடைவெளி கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக பயன் படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். பத்திரமாக இருங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று படித்த வழக்கத்துக்குக் கொண்டு வரும் நேரம் இது.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

You'r reading கொரோனா பரவும் அபாயம்: வீட்டை வெளியில் போகாதீர்கள்.. வீடியோவில் கமல்ஹாசன் கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை