கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். மும்பை, ஆந்திராவில் மட்டும் படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. சில நாடுகளில் படப்பிடிப்புக்கு அனுமதி உள்ளது. இதையடுத்து பி,கே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான் தனது படத்திற்கு சில முக்கிய காட்சிகள் எடுக்க சில நாட்களுக்கு முன் துருக்கி புறப்பட்டுச் சென்றார்.குறிப்பிட்ட பகுதியில் படப்பிடிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் அப்பகுதியில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர். ஆனால் ஹீரோவை காணாமல் அங்குமிங்கும் சுற்றி யார் ஹீரோ என்று கேட்ட வண்ணம் இருந்தனர். யாரும் பதில் சொல்லவில்லை.
இந்த நிலையில் யாருக்கும் அடையாளம் தெரியாமலிருக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து அமிர்கான் நடந்து வந்தார். யாரோ சூட்டிங் வேடிக்கை பார்க்க வந்தவர் என்று முதலில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு ரசிகர் அவரை பக்கவாக அடையாளம் கண்டுகொண்டு அமீர் ஜி அமீர் ஜி என்று உற்சாகத்தில் கூச்சலிட்டார். அடுத்த நொடி அப்பகுதியிலிருந்த ரசிகர்கள் ஒன்றாகத் திரண்டு அமீர்கானை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அதற்குமேல் அங்கிருந்து தப்ப முடியாத படி நெரிசலில் அவர் சிக்கிக்கொண்டார்.கொரோனா சமூக விலகல் எல்லாம் காணாமல் செய்த ரசிகர்கள் அமீர்கானை வளைத்து வளைத்து வீடியோ எடுக்கத் தொடங்கினர். பலர் அவருடன் புகைப்படம் எடுத்தனர். வேறு வழியில்லாமல் அவர்களுடன் நின்று சிரித்தபடி அமீர்கான் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இதனால் சுமார் அரை மணிநேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.