மோகன்லாலின் திரிஷ்யம் 2 படப்பிடிப்பு தொடங்கியது..!

Drishyam 2 shooting starts in kochi

by Chandru, Sep 21, 2020, 18:12 PM IST

மலையாளம், தமிழ், இந்தி உட்படப் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம். கடந்த 2013ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கான மொத்த செலவு ₹5 கோடி மட்டுமே. ஆனால் படம் ₹75 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. மலையாளத்தில் முதன் முதலில் ₹50 கோடி வசூலைத் தாண்டியது இந்த படம் தான். மலையாளத்தில் இந்த படம் பெரும் வெற்றி பெற்றதால் பல மொழிகளில் இது மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகி அங்கும் பெரும் வெற்றி பெற்றது.

தமிழில் கமல், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று அப்போதே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதன் டைரக்டர் ஜீத்து ஜோசப் அதுகுறித்து எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் 'திரிஷ்யம் 2' எடுக்கப் போவதாகக் கடந்த வருடம் ஜீத்து ஜோசப் கூறினார். கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பைத் தொடங்க முடியவில்லை. இந்நிலையில் இன்று கொச்சியில் பூஜையுடன் திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் முடிவடைந்த பின்னர் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முதல் பாகம் எடுக்கப்பட்ட தொடுபுழாவில் நடைபெற இருக்கிறது. நடிகர் மோகன்லால் 2 நாட்களில் படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் கொரோனா நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் தவிர வேறு யாரும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது. அனைவரும் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் மோகன்லாலின் ஜோடியான மீனா தான் இந்தப்படத்திலும் அவருக்கு ஜோடியாகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை