சினிமா தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர்களுக்கிடையே பல கால கட்டங்களில் மோதல் நடந்திருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இம்முறை அவர்கள் எல்லோரையுமே சண்டை இல்லாமல், பணிகளை முடக்கிப் போட்டு விட்டது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். ஊரடங்கு காரணமாக சுமார் 8 மாதமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. தியேட்டர் கேண்டினில் விற்பதற்காகப் போடப்பட்டிருந்த தின்பண்டங்கள் எக்ஸ்பையரி டேட் தாண்டி தூக்கி வீசப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்று முடிந்து விடும் பெரிய நடிகர்கள் படங்களை திரையிட்டு இழப்புக்களை சமாளித்து விடலாம் என தியேட்டர் அதிபர்களும், அதேபோல் எப்படியாவது தியேட்டர் திறக்கப்பட்டால் கோடிகளில் பைனான்ஸ் வாங்கி தயாரித்த படங்களை விற்று வட்டியும் முதலுமாக செலுத்தி விடலாம் என்று எண்ணிய தயாரிப்பாளர்களும் தியேட்டர்கள் திறக்கப்படாததால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய நடிகர்கள் நடித்த படங்களை அமேசான், டிஸ்னி பிளஸ், ஜீ5 போன்ற ஒடிடி தளங்கள் கோடிகளைக் கொடுத்து வாங்க முன்வந்தன. தியேட்டர் திறக்கும்வரை காத்திருக்க முடியாத நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்துக்கு விற்கப்பட்டு ரிலீஸ் ஆனது. பின்னர் அந்த படங்கள் விஜய தசமியில் டிவியில் திரையிடப்பட்டது. சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று படமும் தியேட்டர் திறப்புக்காகக் காத்திருந்து திறக்காததால் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்கப்பட்டது.
முன்னதாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஒடிடிக்கு விற்றபோதே தியேட்டர் அதிபர்கள் அப்பட நிறுவனம் தயாரிக்கும் படங்கள் மற்றும் அது தொடர்புடைய படங்களை தியேட்டரில் திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். அந்த பிரச்சனை முடிவதற்கு முன்பே சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் ஒடிடிக்கு விற்கப்பட்டதால் தியேட்டர் அதிபர்கள் ஒட்டு மொத்தமாக நொந்து போயினர்.
சமீபத்தில் தமிழ முதல்வரைச் சந்தித்த தியேட்டர் அதிபர்கள் சினிமா திரையரங்குகளை மத்திய அரசு வழிகாட்டுதல்களுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். அதுகுறித்து 28ம் தேதி முடிவெடுத்து அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்தார். தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதாகத் தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. எனவே எப்படியும் தீபாவளிக்குள் அதாவது நவம்பர் முதல் வாரத்தில் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு அதிரடி போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ஒடிடியில் ரிலீஸ் செய்த படங்களை மீண்டும் தியேட்டரில் திரையிட மாட்டோம் என அறிவித்து புதிய ஷாக் கொடுத்திருக்கிறார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.