புதியபடங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம்.. தயாரிப்பாளர்கள் திடீர் போர்க்கொடி..

by Chandru, Nov 2, 2020, 13:32 PM IST

கொரோனா வைரஸ் காரணமாக திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடியிருந்த நிலையில் வரும் 10ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எண்ணிய நிலையில் தயாரிபாளர்களுக்கும். திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறனர்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியவுடன் இனிமேலும் விபிஎப் என்கிற கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மற்றும் அனைத்து டிஜிட்டல் புரஜக்‌ஷன் நிறுவனங்களுக்கும் முறையாக கடிதம் அனுப்பி அதில் 12 வருடங்களுக்கு மேலாக கட்டி வரும் வி பி எப் என்ற கட்டணத்தை வாராவாரம் இனிமேல் கொடுக்க முடியாது டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங் க்ளோனிங் டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணம் எதுவோ அதை மட்டுமே இனிமேல் எங்களால் தரமுடியும் என்று தெரிவித்திருந்தோம். திரையரங்கில் உள்ள புரஜக்டர் சம்பந்தப் பட்ட லீஸ் தொகையை திரையரங்குகள் தான் கட்ட வேண்டும் தயாரிப்பாளர்கள் அல்ல என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம் அத்தகைய ஒரு ஒன் டைம் கட்டணம் முறைக்கு ஒப்புக்கொள்ள வில்லை என்றால் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி வந்தாலும் எங்களின் புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.

நூறு பேருக்கும் மேல் நடப்பு தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்து தெரிவித்த போதிலும் திரையரங்கு உரிமையாளர்களும் டிஜிட்டல் ப்ரஜெகஷன் நிறுவனங்களும் எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் நாங்கள் விபிஎப் கட்டணத்தை தொடர்ந்து வாங்குவோம் என்று எங்களுக்கு தெரிவித்து உள்ளனர். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில் ஒன்று கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளதால் நடப்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருங்கிணைந்து வி பி எப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும் வரை தங்களின் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விபிஎஃப் கட்டணப் பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களின் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.



வி பி எஃப் கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி தலைவர் என் ராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கொரோனா காரணமாக 7 மாத காலமாக மூடிக்கிடந்த திரையரங்குகளை இம்மாதம் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கையுடன் திறப்பதற்கு திரையுலகினரின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தாயுள்ளத்தோடு அனுமதி அளித்ததற்கு தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பில் அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் செய்தித் துறை அமைச்சருக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம் சக தயாரிப்பாளர்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் திரையரங்குகளில் படம் படங்களை திரையிட நாம் இதுவரை செலுத்திவந்த வி பி எஃப் கட்டணத்தை செலுத்தாமல் இருக்க முன்வரவேண்டும்.

காரணம் கியூப், யூ எப் ஓ போன்ற நிறுவனங்கள் ஹாலிவுட் படங்களுக்கும் மற்ற ஆங்கில படங்களுக்கும் விபிஎப் கட்டணம் வசூலிப் பது இல்லை மாறாக கொள்ளை லாபம் ஈட்ட ஏராளமான தொகையை நம்மிடமிருந்து ஏற்கனவே வசூலிக்கின்றனர். எனவே நாம் விழிப்புணர்வோடு ஒற்றுமை உணர்வுடன் இந்த கட்டணம் செலுத்தாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் எங்களின் இந்த நிலைப்பாட்டை நான்கு மாதங்களுக்கு முன்னரே தெரிவித்துள்ளோம் அதன் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை தயாரிப்பாளர் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பிபிஎஸ் கட்டணம் செலுத்தாமல் நாம் ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு என் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You'r reading புதியபடங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம்.. தயாரிப்பாளர்கள் திடீர் போர்க்கொடி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை