நடிகர் சிம்புவிடம் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றம் பற்றி கோலிவுட்டில் பலரும் பேசும் பொருளாகி இருக்கிறது. படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறார் என்ற புகாரையெல்லாம் ஈஸ்வரன் படம் மூலம் ஊதி தள்ளிவிட்டார். 40 நாட்களுக்குள் அதன் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் சிம்பு. அப்படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இடைவிடாத படப்பிடிப்பில் சிம்பு பங்கேற்ற முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. பைக் சேஸிங்காட்சி மற்றும் குண்டு வெடிப்பு கலவரக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் முஸ்லிம் இளைஞராகச் சிம்பு நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. நெற்றியில் துப்பாக்கி தோட்ட பாய்ந்து ரத்தம் சொட்டுவது போன்ற அந்த புகைப்படம் நெட்டில் வைராலனது.
இடை விடாத படப்பிடிப்பில் சற்று இடைவெளி கிடைத்தவுடன் வீட்டுக்கு வந்தார் சிம்பு. குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்தார். தங்கை இலக்கியாவின் குழந்தை ஜேசன் அபியை காரில் தன் மடியில் அமர்த்திக்கொண்டு நகர் வலம் வந்தார். சிக்னல் ஒன்றில் கார் நின்றதும் அருகில் இன்னொரு காரில் வந்தவர்கள் சிம்புவை அடையாளம் கண்டு கொண்டு அவருக்குச் சைகை காட்டினர். சிம்புவும் பதிலுக்கு அவர்களுக்கு டாட்டா காட்டியதுடன் குழந்தையை அவர்களுடன் போகிறாயா? என்று ஜாலியாக கேட்க அதற்குக் குழந்தை நோ என்று சொல்கிறது. இந்த காட்சியை வீடியோவாக சிம்பு வெளியிட்டிருக்கிறார்.சிம்புவின் புதிய மாற்றம் குடும்பத்தினருடன் காட்டும் நெருக்கம் போன்றவற்றால் அவரது தாயார் உஷா ராஜேந்தர் மகிழ்ச்சி அடைந்து சிம்புவுக்கு விலை உயர்ந்த கார் வாங்கி பரிசளித்தார்.
வரும் 2021ம் ஆண்டில் நடிப்பில் சுமார் 4 முதல் 5 படங்கள் வெளியாகும் அளவுக்கு பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மாநாடு திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முப்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க உள்ளார். இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர். முருகதாஸ் படங்களில் நடிக்க உள்ளார். இது தவிர ஹன்சிகா நடித்திருக்கும் 50வது படமான மஹா படத்தில் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.