கட்டுமஸ்தாக பாக்ஸிங் சண்டைக்கு தயாரான நடிகர்..

by Chandru, Dec 3, 2020, 11:19 AM IST

கபாலி, காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் சார்பட்டா பரம்பரை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே இப்படத்துக்கு ஆர்யா தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக கடுமையான பயிற்சிகள் செய்தார். பாக்ஸிங் வீரராக நடிப்பதால் அதற்காக பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார். கே 9 ஸ்டுடியோஸ் (K9 Studios) மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்குகிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.இந்த திரைப்படத்திற்காக ஆர்யா மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காகக் கட்டு மஸ்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக துஷாரா நடிக்கிறார், நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் கபிலன், அறிவு. முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.

படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.படப்படிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், மார்ச் இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை