இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதியபடம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப் பிடிப்பு தடைபட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்.
மேலும் இப்படத்தின் ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவரும் பயிற்சியின் போது காயம் அடைந்தனர். இதனாலும் படப்பிடிப்பு தள்ளிப்போனது. எல்லாம் முடிந்து கடந்த மாதம் படப் பிடிப்பு தொடங்கி 50 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடந்தது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சென்ற படக் குழு அங்குள்ள மஹாபலேஸ்வர் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியது. அதனை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பியது படக் குழு.
ஆர் ஆர் ஆர் படத்தில் இந்தி நடிகை அலியாபட் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது படப் பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டு இருந்தது. இதற்கிடையில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையின் போது அலியாபட் அவரை அவமானப்படுத்தியாக புகார் எழுந்தது. இதில் கோபம் அடைந்த ரசிகர்கள் ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து அவரை நீக்கும்படி குரல் எழுப்பினார். அதை ராஜமவுலி ஏற்கவில்லை. கடந்த மாதம் அலியாபட் ஷூட்டிங்கில் பங்கேற்பதாக இருந்தது. அப்போது இப்படத்தின் டீஸரில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி வைத்து நடித்ததற்கு ஆதிவாசிகளும். பா ஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் ராஜமவுலியை தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதுபோன்ற பிரச்சனையால் அலியாபட் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
பிரச்சனைகள் அமைதியான சூழலில் அலியாபட் ஒருவழி யாக படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத்துக்கு நேற்று வந்து சேர்ந்தார். இன்றுமுதல் அவர் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.இதுகுறித்து அலியாபட் தனது இணைய தள பக்கத்தில், இறுதியாக ஆர் ஆர் ஆர் டீமில் இணைகிறேன் என தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் அல்லூரி சிதாராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் ஜோடியாக அலியாபட் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜூனியர் என் டி ஆர் கோமரம் பீம் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.