அரசியல் தலைவர்கள் தனி விமானங்களில் பயணித்து வந்த நிலை மாறி தற்போது சினிமா பிரபலங்கள் தனி விமானத்தில் பயணிக்கும் காலம் வந்திருக்கிறது. நடிகை நயன்தாரா தனது காதலன் விக்கேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாட அவரை தனி விமானத்தில் கோவா அழைத்துச் சென்று அங்கு பிறந்த தினம் கொண்டாடிய சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா. கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டது.
கடந்த 7 மாதமாக படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது. கொரோனா தொற்று பரவல் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அவர் இல்லாத காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதத்துக்கு முன் நடந்தது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி சம்மதம் தெரிவித்ததையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. வரும் 15ம் தேதி முதல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. அதில் பங்கேற்க ரஜினி 14ம் தேதி சென்னையிலிருந்து புறப்படுகிறார். இதற்காக அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் புத்தாண்டுக்கு ஒருநாள் முன்னதாக படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்புகிறார் ரஜினி.
டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவதற்கான தேதி அறிவிக்கிறார். அதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பிறகு மீண்டும் ஐத்ராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்ற நட்சத்திரங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். அண்ணாத்த படப்பிடிப்பை முற்றுலுமாக முடித்துகொடுத்த பிறகு ரஜினி காந்த் அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்க உள்ளார். தேர்தல் 2021ம் ஆண்டு மத்தியில் நடக்க உள்ள நிலையில் அவர் தேர்தல் சுற்றுபயணம் மேற்கொள்வதுபற்றி முடிவு செய்கிறார். குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் ரஜினி அரசியல் கட்சி கூட்டத்தில் பங்கேற்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவரது உடல் நிலையை கருதி தேர்தல் சுற்றுப் பயனம் மேற்கொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனாலும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்களும் அவருக்கு நெருங்கியவர்களும் கூறிவருகின்றனர்.