பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று திருச்சூரில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காகச் சென்றார். ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அவர் மறந்து விட்டார். இதனால் அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த பின்னர் அவர் ஓட்டு போட்டார்.கேரளாவில் இன்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோட்டயம் மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட்டு வருகின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் வாக்குப் பதிவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக ஓட்டு போட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் தேர்தல் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போடச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை மஞ்சுவாரியரின் வீடு திருச்சூர் அருகே உள்ள புள்ளு என்ற இடத்தில் உள்ளது. பெரும்பாலும் தேர்தலில் இவர் ஓட்டு போட மறப்பதில்லை. இன்றும் வழக்கம்போல மஞ்சு வாரியர் தனது தாய் கிரிஜா வாரியருடன் காலை 7 மணிக்கே ஓட்டுப் போடுவதற்காகச் சென்றார். அப்போது வாக்குச்சாவடியில் ஒரு சில பேர் மட்டுமே இருந்தனர். சுமார் 5 நிமிடம் வரிசையில் நின்ற மஞ்சு வாரியர் ஓட்டு போடுவதற்காக பூத்துக்குள் சென்றார். அப்போது தேர்தல் அதிகாரி மஞ்சு வாரியரிடம் அடையாள அட்டையைக் கேட்டார். அப்போது தான் தேர்தல் அடையாள அட்டையை எடுக்காமல் வந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.
இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். வீட்டுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த பின்னர் தான் அவரால் ஓட்டுப் போட முடிந்தது. இதற்கிடையே பிரபல நடிகர் மம்மூட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் அவரால் இன்று ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.