விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ் நடிக்கின்றனர் மற்றொரு முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்திலிருந்து இவரது படம் வெளியிடப்படாமலிருந்தது. திறமையான நடிகை ஆண்ட்ரியாவுக்கு நேற்று பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி ஆண்டிரியாவின் மாஸ்டர் பட லுக் வெளியானது. அவர் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து காணப்பட்டார். அழகு சிலையாக அவர் விஜய் அருகில் அமர்ந்து அவரிடம் பேசி உற்சாகப்படுத்துவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
விஜய் இப்படத்தில் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். கல்லூரி விழாவில் இருவரும் இருக்கும் காட்சியாக இது இருக்கும் என்று தெரிகிறது. விஜய், ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய 3 கதாபாத்திரங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதும் இப்படம் மூலம் தெரிவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். சீர்திருத்த பள்ளியில் படிக்கும் விஜய் பின்னர் கல்லூரி பேராசிரியாகிறார். குடிபழக்கத்தால் அவருக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அப்போது அவரது எதிரிகள் விஜய்யை கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். இதிலிருந்து அவர் மீள்கிறாரா என்ற கதையுடன் படம் உருவாகி இருப்பதாக நெட்டில் தகவல் பரவுகிறது. ஆக்ஷன், காதல், உணர்ச்சி, பழிவாங்கல்கள் நிறைந்த படமான, மாஸ்டர் வரும் பொங்கல் 2021ல் வெளியிடப்பட உள்ளது.
இதனால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. 'இப்படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக திரை அரங்குகள் மூடியிருந்த நிலையில் புதிய படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கும், பொங்கல் சிறப்பு காட்சிகளுக்கும் தியேட்டர் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டால் அதுபற்றி ஆலோசித்து நல்ல முடிவு தெரிவிக்கப்படும் என்று தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்புர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.