Thursday, Apr 22, 2021

மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு: முண்டியடிக்கும் கூட்டம்..

by Chandru Jan 10, 2021, 15:31 PM IST

கொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மருத்துவ குழுவுடன் அரசு ஆலோசனை நடத்திய பிறகு கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத அனுமதி என்றதால் மாஸ்டர் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது. அதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் 13ம் தேதி வெளியாகிறது அன்று முதல் 100 சதவீதம் டிக்கெட்டுடன் படங்கள் வெளியாகிறது மறுநாள் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்குகிறது. ஆன்லைனில் டிக்கெட் பதிவு நடக்கிறது. ஆனால் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. 100 சதவீத அனுமதியைவிட 50, சதவீத அனுமதியே மேல் என்று நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்தார். அடுத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி ஆர்.

ரவீந்திரநாத் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: திரைத்துறையினரின் அழுத்தத்தால், தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக்கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொது மக்களின் நலன்களுக்கு எதிரானது. இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். தனிநபர் இடைவெளியை பராமாரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பொதுமக்களின் உயிரைவிட திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாக தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது. கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்திடவும், கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். எனவே,தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திரைத்துறையினரும் சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா விதிமுறைகளை ஜனவரி 31ம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் 100 சதவீத டிக்கெட் அனுமதி ரத்து செய்யப்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டது.

100 சதவீத டிக்கெட் அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 100 சதவீத இருக் கைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் 100 சதவீத டிக்கெட் அனுமதியை வாபஸ் பெற்றது. 50 சதவீத டிக்கெட்தான், அதுவும் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் விஜய் ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர். கூட்டம் கூட்டமாக அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தியேட்டரில் திரள்கின்றனர். கூட்ட நெரிசலில் கொரோனா வழிகாட்டுதல்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

முன்பதிவிற்காக பல தியேட்டர்களில் காத்திருக்கும் ரசிகர்கள் கம்ப்யூட்டர் சர்வர் சரியாக இயங்காததால் கால் கடுக்க காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தியேட்டர்களுக்கு மட்டும்தான் கட்டுப் பாடா கோயில்களில் கூடும் கூட்டம், சர்ச்களில் கூடும் கூட்டம், மால்களுக்கு திரளும் கூட்டத்துக்கு கட்டுப்பாடு கிடையாதா என்று விஜய் ரசிகர்கள் கோயில்களிலும் மற்ற இடங்களில் நெருக்கி தள்ளிக் கொண்டிருக்கும் ஜன நெரிசல் மிக்க வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 100சதவீத டிக்கெட் அனுமதி ரத்து செய்யப்பட்டு 50 சதவீதம் ஆக்கிய நிலையில் மேற்கு வங்காளத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு: முண்டியடிக்கும் கூட்டம்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை