தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் கடந்த 13ம் தேதி வெளியாகி 2 வது வாரம் தொட்ட நிலையில் 200 கோடி வசூல் சாதனை நிகழ்த்தி வசூலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருப்பது திரையுலகினருக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள முக்கிய பகுதிகள் லாக்டவுன் நிலை நீடிக்கிறது. எனவே மாஸ்டர் படத்தை அங்கு வெளியிட முடியவில்லை. படம் வெளியாகி 9 நாட்களை கடந்த பிறகு மொத்தமாக 200 கோடி தாண்டி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னையில் தொடர்ச்சியாக பல கோடியை தாண்டி வசூல் மழை தொடர்கிறது. மாஸ்டர் சென்னையில் தனது வலுவான காலடி பதித்துள்ளது. இன்னமும் நிறைந்த அரங்குடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
முன்னதாக மாஸ்டர் வெளியாவதில் ஊசலாட்டம் நிலவி வந்தது. 50 சதவீத டிக்கெட் அனுமதி என்றதால் பட ரிலீஸை படக்குழு தள்ளிவைத்தது. ஆனாலும் தியேட்டர் அதிபர்கள், மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தமிழக முதல்வருக்கு 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்து 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கியது அரசு. ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. 100 சதவீத டிக்கெட் அனுமதித்தால் கொரோனா வேகமாக பரவும் என்று அறிவுறுத்தியதுடன் அரசு 100 சதவீத முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றனர். மத்திய அரசும் 100 சதவீத டிக்கெட் கூடாது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தர விட்டது. மேலும் 100 சதவீத டிக்கெட் அனுமதியை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் இதுகுறித்து அரசிடம் கருத்து கேட்டது. பலமுனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் 100 சதவீத அனுமதி உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கியது.
மாஸ்டர் படம் அறிவித்தபடி 13ம் தேதி அதிக தியேட்டர்களில் வெளியாகி வசூலை ஈட்டி வருவதுடன், ஹிட் படமாகவும் அமைந்துள்ளது. தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்தபடி மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டருக்கு திரளவைத்திருக்கிறது. கொரோனா கால ஊரடங்கு தளர்வில் தமிழில் வெளியான முதல் பெரிய படம் “மாஸ்டர்”. இது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதை திரையுலகில் நடந்துவரும் ஆடியோ விழாக்களில் பெரும் அளவு புகழப்பட்டு வருகிறது. பலவேறு திரை அரங்குகளிலும் விஜய்க்கு நன்றி தெரிவித்து வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.தமிழ், தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் மீண்டும் இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யூ டியூபில் மாஸ்டர் படத்தில் இடம் பெறும் குட்டி ஸ்டோரி பாடல் முழு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வெளியானது அது கார்ட்டுன் காட்சிகளாக இருந்தது. தற்போது வெளியிடப்பட்டது லைவ் காட்சியாகும்