சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இது விக்ரமின் 60வது படமாகும். இதில் அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இதே படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இதுவொரு முழுமையான அதிரடி பொழுதுபோக்கு படமாக உருவாக இருப்பதாக இயக்குனர் தெரித்தது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும், மார்ச் மாதம் முதல் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் தேதி பிரச்சினைகள் காரணமாக கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க இயலவில்லை என அவர் தெரிவித்தார். ஏற்கனவே சில புதியபடங்களில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டிருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்பராஜ் தற்போது விக்ரம் 60 பட ஸ்கிரிப்ட் இறுதிக் கட்டத்தை நிறைவு செய்து வருகிறார். எனவே இதன் படப்பிடிப்பு தொடங்க காலதாமதமாகும் என்று தெரிகிறது. முதன்முறையாக விக்ரமும் அவரது மகன் துருவும் இதில் இணைந்து நடிக்க உள்ளனர். தந்தை-மகன் இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்க எப்படி சம்மதம் பெற முடிந்தது என்பதுபற்றி இயக்குனர் கூறும்போது, " ஜெகமே தந்திரம் படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய வேலைகளில் பிஸியாக இருந்தேன். அப்போதுதான் விக்ரம் சார் என்னை அழைத்து ஒரு புதிய படம் பற்றி விவாதித்தார், அவர் ஒரு அசாதாரணமான நடிகர், நான் எப்போதும் அவருடன் பணியாற்ற காத்திருந்தேன், உடனடியாக அவரை சந்தித்தோம், நிறைய பேசினோம். கடைசியில் ஒரு கதையை சொன்னபோது அவருக்கு பிடித்தது அதில் இணைய முடிவு செய்தோம். அதுதான் தந்தை - மகன் இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்க காரணமாக அமைந்தது. இது திடீரென்று நடந்தது, அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது என்றார்.
அவர்மேலும் கூறுகையில், "இருப்பினும், நான் இன்னும் ஸ்கிரிப்டை முடிக்காததால் இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டது. வரும் மாதங்களில் இது ரெடியாகி விடும் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் விரைவில் எங்கள் பணிகளை தொடங்குவோம்" என்றார் கார்த்திக் சுப்பராஜ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் ஊரடங்கால் அது ஒத்திவைக்கப்பட்டது, வரும் பிப்ரவரி 14 அன்று இப்படத்தை வெளியிட திட்ட மிட்டுள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். லண்டனின் பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுவொரு அண்டர் வேல்ட் தாதா கதையாக உருவாகி இருக்கிறது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், சவுந்தர ராஜா, தீபக் பரமேஷ், தேவன், வடிவுக்கராசி , சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.