நயன்தாரா படத்துக்கு சர்வதேச உயரிய விருது..

by Chandru, Feb 9, 2021, 10:38 AM IST

அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜின் கூழாங்கல் திரைப்படம் 50 வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் 2021 இல் மதிப்புமிக்க டைகர் விருதைப் பெற்றுள்ளது. முதன் முறையாக ஒரு தமிழ் படம் இந்த விருதினை பெறுகிறது. இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர்.இதுபற்றி பட இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் கூறியதாவது: இந்த அங்கீகாரத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திரைப்பட விழாவில் கூழாங்கல் படத்தை பார்த்த நடுவர் மற்றும் பார்வையாளர்கள் அதைப் பற்றி ஆர்வமாகப் பேசினார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம். வழக்கமாக, படக் குழுவில் இருந்து ஒரு சில உறுப்பினர்கள் பார்வையாளர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறத் திரைப்பட விழா நடைபெறும் நாட்டிற்கு வருகிறார்கள்.

ஆனால், தொற்றுநோய் காரணமாக அந்த வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். இருப்பினும், இந்த சாதனை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”என்கிறார் இயக்குனர்.தனது குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவமே கூழாங்கல் திரைப் படத்தை உருவாக்கத் தூண்டியது என்று வினோத் தெரிவிக்கிறார். “இந்த சம்பவம் எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, அதை ஒரு படமாக உருவாக்க முடிவு செய்தேன். கதைக்குத் தேவையான வறண்ட நிலப்பரப்பைத் தேடுவதில் நான் நிறைய நேரம் செலவிட்டேன். இறுதியாக, மதுரை மேலூருக்கு அருகிலுள்ள அரிட்டப் பட்டியில் அதனை நான் கண்டேன், அங்கு முழு படமும் 30 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்டது. நாங்கள் படம் எடுத்த 13 கிராமங்களில் உள்ள மலைகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையானவை. நான் அந்த கிராமங்களை ஆராய்ந்தபோது இந்த கதை மேலும் வலுவடைந்தது.

இங்கு படப்பிடிப்பு நடத்துவது சவாலாக இருந்தது. அதற்குக் காரணம் ஈரப்பதமான வானிலை நிலவும் சூழல். கதைக்குச் சூரிய ஒளி முக்கியமானது என்பதால், நாங்கள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குப் பிறகு படப்பிடிப்பைத் தொடங்குவோம், பிற்பகல் 3 மணிக்குள் அதை முடித்துவிடுவோம். மாலையில் அன்றைக்கு எடுத்த காட்சிகளைச் சரி பார்ப்போம், அது அடுத்த நாளுக்கான உந்துதலைத் தரும். ”இப்படத்தில் இணைந்திருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் (தயாரிப்பாளர்கள்) போன்ற பெரிய பெயர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க உதவியது.இவ்வாறு இயக்குனர் தெரிவித்தார்.

கூழாங்கல் படக்குழு மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் படத்தைத் திரையிட உள்ளது. அதன் பிறகு அதை இந்த ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியிட உத்தேசித்துள்ளனர்.முன்னதாக கடந்த மாதம் கூழாங்கல் படத்தைப் பார்த்து நெகிழ்ந்த நயந்தாரா, விக்னேஷ் சிவன் அப்படத்தின் தயாரிப்பு மற்றும் விருதுகளுக்கு அனுப்பும் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் ரோட்டர் டாம் விழாவிலும் கலந்துகொண்டனர்.

You'r reading நயன்தாரா படத்துக்கு சர்வதேச உயரிய விருது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை