திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவது நல்லதல்ல. அப்படியே வெளியிட வேண்டுமாயின் இதற்கென ஒரு காலக்கெடு நிர்ணயித்து அதன்பிறகு வெளியிடவேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.கோவில்பட்டியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : திரையரங்குகளில் படம் ஓடும் போது ஓடிடியில் திரைப்படத்தினை வெளியிட மாட்டோம் என்று கடிதம் கொடுத்தால் தான் திரைப்படங்களைத் திரையிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.கொரோனா ஊரடங்கு காலத்தில் சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன. இதனைத் தற்காலிக ஏற்பாடாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூட தெரிவித்திருந்தேன்.
திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். மூன்று தரப்பினரும் இப்பிரச்சினை தொடர்பாகப் பேச வேண்டும். அப்போதுதான் நல்ல முடிவு கிடைக்கும்.நகர்ப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஓடிடியில் பார்க்கும் வசதி எளிதில் கிடைக்கும். அதே சமயம் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அந்த வசதி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லதல்ல.திரையரங்குகளில் ஓடிய பின்னரே ஓடிடியில் வெளியிடலாம். முதல் ரீலிஸ் திரையரங்குகளிலும், இரண்டாவது ரீலிஸ் ஓடிடியிலும் வெளியிடலாம். ஓடிடியில் வெளியிடக் காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.